கோலாலம்பூர், ஆகஸ்ட் 12: மே 1 முதல் அமலுக்கு வந்த விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்பு (மருந்துகளின் விலை நிர்ணயம்) ஆணை 2025 இன் கீழ் நாடு முழுவதும் உள்ள 1,639 தனியார் சுகாதார நிலையங்களில் மொத்தம் 55 சதவீதம், மருந்து விலையைப் பொதுவில் வைக்கும் நடவடிக்கையை பின்பற்றுகின்றன.
அமைச்சகத்தின் கண்காணிப்பில் 55 சதவீதம் அல்லது 900 தனியார் வளாகங்கள் திருப்திகரமான இணக்க நிலையில் இருப்பதாக துணை சுகாதார அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்தார்.
“இதர 45 சதவீதம், முழுமையற்ற விலைக் காட்சிகள் அல்லது நோயாளிகள் எளிதில் அணுக முடியாத விலைக் காட்சிகள் உட்பட, தேவையான இணக்க நிலையை இன்னும் எட்டவில்லை.
“கண்காணிப்பை வலுப்படுத்துதல், வழிகாட்டுதல் அமர்வுகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறும் வளாகங்களுக்கு எதிராக படிப்படியாக நடவடிக்கை செயல்படுத்துதல் போன்ற பின்தொடர்தல் நடவடிக்கைகளின் தேவை இன்னும் உள்ளது என்பதை இந்தக் முடிவுகள் காட்டுகின்றன,” என்று அவர் மக்களவையில் நடந்த கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.
தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சமூக மருந்தகங்களில் மருந்து விலைகளைக் காட்சிப்படுத்துவதை செயல்படுத்துவதன் நிலை குறித்து டத்தோ டாக்டர் அஹ்மத் யூனுஸ் ஹைரி (பிஎன்-கோலா லங்காட்) கேட்ட கேள்விக்கு லுகானிஸ்மான் பதிலளித்தார்.
இந்த செப்டம்பர் மாதம் முதல் மருந்து விலையை பொதுவில் வைக்கப்படும் நடவடிக்கை செயல்படுத்துவதன் தாக்கம் குறித்து அமைச்சகம் ஒரு ஆய்வை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.