கோலாலம்பூர், ஆக. 12. கல்வி அமைச்சின் கீழுள்ள கல்விக் கழகங்களில் 51.4 லட்சம் மாணவர்களுக்கு ஜாலூர் கெமிலாங் சின்னங்களை வாங்குவதற்காக மொத்தம் 84 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள், ஆறாம் படிவ கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்விக் கூடங்கள் (ஐ.பி.ஜி.) ஆகியவற்றில் உள்ள மாணவர்களுக்கு தலா இரண்டு என்ற அடிப்படையில் ஜாலூர் கெமிலாங் சின்னங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன என்று நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வப் பதிலில் கல்வி அமைச்சு கூறியுள்ளது.
இந்த ஒதுக்கீடு 2025 பிப்ரவரி மாதம் அனைத்து மாநில கல்வித் துறைகளுக்கும் மற்றும் தொடர்புடைய கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு மாணவர் மற்றும் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப ஒருங்கிணைக்கப்படுகிறது.
கொள்முதல் செயல்முறைகள் மாநில கல்வி இலாகா மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களால் மின்னணு கொள்முதல் முறை மூலம் டெண்டர்கள் வழி மேற்கொள்ளப்படுகிறது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் கல்வி நிறுவனங்களின் கீழுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஜாலூர் கெமிலாங் சின்னங்களை வழங்க அரசாங்கத்திற்கு உண்டாகும் செலவு மற்றும் எந்த நிறுவனம் அவற்றை வழங்குகிறது என்பது குறித்து கோல கிராய் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் அப்துல் லத்திப் அப்துல் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு அமைச்சு இவ்வாறு பதிலளித்தது.
விநியோக செயல்முறையை விரைவுபடுத்தவும், அதிக தகுதி வாய்ந்த விநியோகிப்பாளர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும் மண்டல வாரியாக கொள்முதலை செயல்படுத்த மாநில கல்வித் துறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜாலூர் கெமிலாங் சின்னங்களை விநியோகிக்கும் பணியில் 91 விநியோகிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.