ஆயர் தாவார், ஆகஸ்ட் 12 - சதுரங்க விளையாட்டை தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஊக்குவிக்கும் வகையில் பேராக் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை மணி 8.00க்கு தொடங்கிய இப்போட்டி மாலை மணி 5.00க்கு நிறைவுற்றது.
சக்கரவியூகம் 1.0 என்ற தலைப்பில் பேராக், ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மாநிலத்தின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 212 மாணவர்கள் கலந்து கொண்டதாக ஏற்பாட்டுக்குழு தலைவர் கவியரசு முனுசாமி தெரிவித்தார்.
"முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் நான்கு மாறுபட்ட பிரிவுகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மொத்த ஆறு சுற்றுகளாக இப்போட்டி நடத்தப்பட்டது.
ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் நிலையிலிருந்து பத்தாம் நிலை வரையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதைத் தவிர்த்து 7,8,10,11 வயது மாணவர்களுக்கும் இப்போட்டியில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன," என்று ஏற்பாட்டுக்குழு தலைவர் கவியரசு முனுசாமி தெரிவித்தார்.
தமது தரப்பு ஏற்பாடு செய்திருந்தாலும் பள்ளின் நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் சங்கம் ஆகியோர் பல்வேறு வகைகளில் பேராதரவு வழங்கி இருந்ததாகவும் கவியரசு கூறினார்.
ஏற்பாட்டுக் குழுவினரின் முயற்சியும் பயிற்சியும் மாணவர்களின் இலைமறைக்காயான திறமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் தனசேகரன் ரெங்கநாதன் தெரிவித்தார்.
கல்வி, புறப்பாட நடவடிக்கைக்கு அப்பாற்பட்டு உள்ளரங்கு விளையாட்டுகளிலும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் டி.டி. நாராயணன் தெரிவித்தார்.
இதனிடையே, இப்போட்டியில் சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்ட பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙா கூஹாம், மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி கணிசமான நிதியுதவியை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
மேலும், வருங்காலத்தில் பள்ளிக்குத் தேவையான சதுரங்க விளையாட்டு தொடர்புடைய பொருட்களை வாங்கித் தருவதாகவும் அவர் அறிவித்தார்.
பெர்னாமா