கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 - இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கான நாட்டின் வேலையின்மை விகிதம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக 3.0 விழுக்காடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 518,700ஆக குறைந்துள்ளது என்று மலேசிய புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தின் நேர்மறையான வளர்ச்சிக்கு ஏற்ப இவ்வாண்டு ஜூன் மாதத்தில் தொழிலாளர் சந்தைக்கான அடைவுநிலை தொடர்ந்து ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக, மலேசிய புள்ளிவிவரத் துறையின் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முஹம்ட் உசிர் மஹிடின் கூறினார்.
ஒவ்வொரு மாதமும் 0.3 விழுக்காடு அதிகரித்து இவ்வாண்டு ஜூன் மாதம் அதன் எண்ணிக்கை 1 கோடியே 74 லட்சத்து 30 ஆயிரம் தொழிலாளர்களாக பதிவாகி உள்ளதை டத்தோ ஸ்ரீ டாக்டர் முஹம்ட் உசிர் விளக்கினார்.
ஜூன் மாதத்தில் கே.பி.தி.பி எனப்படும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மே மாதத்தில் பதிவுச் செய்யப்பட்டதைப் போல 70.8 விழுக்காடாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது என்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்
அதே மாதத்தில் வேலைவாய்ப்புகள் 0.3 விழுக்காடு அதிகரித்து, 1 கோடியே 69 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்களாக பதிவுச் செய்யப்பட்டுள்ளதையும் அந்த அறிக்கை காட்டுகிறது.
ஜூன் மாதத்தில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 0.7 விழுக்காடு குறைந்து 518,700 தொழிலாளர்களாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெர்னாமா