ராமநாதபுரம், ஆகஸ்ட் 11 - மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்த அனுபவத்தை கொண்டு தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்டத்தில் மலேசிய உணவகம் ஒன்றை திறந்து சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளார் ஷேட் இப்ராஹிம்.
"ஜூலை முதலாம் தேதி தொடங்கி தொம்யாம் மலேசியா" என்ற பெயருடன் செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில் மலேசியாவில் புகழ்பெற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டு அவரது நண்பர் முஹமாட் சிக்கந்தர் கனி மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய பிறகு, அவருடன் இணைந்து இந்த உணவகத்தைத் திறக்கும் யோசனை வந்ததாக 37 வயதாக இப்ராஹிம் கூறினார்.
2008ஆம் ஆண்டு ஜோகூர் பாருவில் பாத்திரங்கள் கழுவும் வேலையில் இணைந்து, பின்னர் பினாங்கில் சமையல் வேளையில் அவர் ஈடுபட்டார்.
அக்காலகட்டத்தில், மலேசியாவின் பல உள்ளூர் உணவுகளை, குறிப்பாக மலாய் உணவு வகைகளையும், நாசி லெமாக், சாத்தே மற்றும் தொம்யாம் போன்ற பிரபலமான உணவுகளை சமைக்கவும் கற்றுக்கொண்டதாக இப்ராஹிம் விளக்கினார்.
"நான் மலேசியாவில் சமைக்கக் கற்றுக்கொண்டேன். மலேசிய உணவு எனக்கு மிகவும் பிடித்திருப்பதால்தான் இந்த உணவகத்தை தொடங்கினேன்.
"அதனால்தான் நான் மலேசிய உணவு வகைகளை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தேன். இங்குள்ள அனைவரும் இதை இவ்வளவு விரும்புவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை," என்றார்.
மேலும், உணவகத்தின் பெயரையும் உணவுப் பட்டியலை மலாய் மொழியில் வைத்திருப்பது கூடுதம் சிறப்பை பெற்றுள்ளது.
-- பெர்னாமா