புத்ராஜெயா, ஆக. 11 - கல்வியமைச்சின் கீழுள்ள அனைத்து கல்விக் கூடங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வியமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.
முழு மற்றும் தினசரி உறைவிடப்பள்ளிகள் உள்பட அனைத்து கல்விக் கூடங்களிலும் பாதுகாப்பு தணிக்கைச் செய்வதும் அந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
பாதுகாப்பு அம்சங்களில் தொடர்புடைய சீரான செயலாக்க நடைமுறை (எஸ்.ஓ.பி.) பின்பற்றல் மீது அந்த தணிக்கை கவனம் செலுத்தும் என்று கல்வித் தலைமை இயக்குநர் டாக்டர் முகமது அஸாம் அகமது அறிக்கை ஒன்றில் கூறினார்.
அந்த தணிக்கை தொடர்பான அறிக்கை கல்வியமைச்சின் உயர் நிர்வாகத்திடம் மூன்று மாதக் காலத்தில் சமர்பிக்கப்படும். பாதுகாப்பு எஸ்.ஓ.பி.களை அமைச்சு தரம் உயர்த்தும் அதேவேளையில் கல்வியமைச்சின் உயர்கல்விக் கூடங்களில் பகடிவதை சம்பந்தப்பட்ட முறைகேடுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
நடப்பு மற்றும் எதிர்கால தேவைக்கேற்ப அமலில் உள்ள அனைத்து எஸ்.ஒ.பி. மற்றும் வழிகாட்டிகளும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அவர் சொன்னார்.
மேலும், பகடிவதை புகார் அகப்பக்கம் உள்பட அனைத்து புகார் முறைகளும் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு முறைகள் ஆக்கத்திறனுடன் இருப்பதை உறுதி செய்வதற்காக கல்வியமைச்சின் அனைத்து கல்விக் கூடங்களிலும் பாதுகாப்பு மறுசீரமைப்பு செயல்குழுவை தமது தரப்பு உருவாக்கும் என்றார் அவர்.
இந்த செயல்குழுவில் கல்விமான்கள், அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், காவல் துறை மற்றும் பெற்றோர் உள்ளிட்ட தரப்பினர் இடம் பெறுவர் என அவர் மேலும் கூறினார்.