கோலாலம்பூர், ஆக. 11 - கோலாலம்பூர் போலீஸ் தலைவராக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் உளவு மற்றும் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் ஃபாடில் மர்சுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ ருஸ்டி முகமது ஈசாவுக்கு பதிலாக ஃபாடில் இப்பொறுப்பை ஏற்றுள்ளார்.
கோலாலம்பூர் போலீஸ் தலைவர் பதவியை அதன் துணைப் போலீஸ் தலைவர் டத்தோ முகமது யுசுப் ஜான் முகமது கடந்த ஜூலை 18 முதல் தற்காலிகமாக வகித்து வந்தார்.
ஃபாடில் மீதான நம்பகத்தன்மை மற்றும் ஆற்றல் மீது அரச மலேசிய போலீஸ் படை கொண்டுள்ள நம்பிக்கையை இந்த நியமனம் புலப்படுத்துகிறது என்று டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.
ஆகவே, கடமையை சிறப்பாகவும் நம்பிக்கைக் பாத்திரமாகவும் நிறைவேற்றும் அதேவேளையில் வழங்கப்பட்ட பொறுப்பினை ஒருபோதும் அலட்சியப்படுத்தி விட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கோலாலம்பூர் போலீஸ் தலைமையக உறுப்பினர்களின் ஆதரவின் வாயிலாக சேவையை சிறப்பான முறையில் மேற்கொண்டு மாநிலத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை ஃபாடில் உறுதி செய்வார் எனத் தாம் நம்புவுதாக அவர் சொன்னார்.
கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் ஸ்ரீ சத்ரியா மண்டபத்தில் நேன்று நடைபெற்ற பதவி ஒப்படைப்பு மற்றும் ஏற்பு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே, கோலாலம்பூரில் பாதுகாப்பை நிலைநிறுத்துவதிலும் தமது உறுப்பினர்கள் சிறப்பான சேவையை வழங்குவதை உறுதி செய்வதிலும் முழு அனுபவத்தையும் தாம் பயன்படுத்தவுள்ளதாக ஃபாடில் கூறினார்.