கோலாலம்பூர், ஆக. 11 - இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் டிஜிட்டல் மலேசியா முன்னெடுப்பின் கீழ் செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ.) துறையில் மலேசியா மொத்தம் 329 கோடி வெள்ளி அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்த்துள்ளது.
இதன் மூலம் ஏறக்குறைய 6,920 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
பிராந்திய ஏ.ஐ. மையமாக விளங்கும் மலேசியாவின் ஆற்றல் மீது முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இந்த சாதனை காட்டுகிறது என்று டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ கூறினார்.
உலகளாவிய டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பில் நாட்டின் நிலையை இது வலுப்படுத்துகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏ.ஐ. மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு 23.5 விழுக்காடாக இருந்த வேளையில் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த பங்களிப்பு 25.5 விழுக்காடாக உயர்த்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது அவர் கூறினார்.
முதலீடுகள், திறமை மேம்பாடு மற்றும் பல்வேறு துறைகளில் பல்வேறு ஏ ஐ. பயன்பாட்டு நிகழ்வுகளை செயல்படுத்துவதில் காணப்படும் நேர்மறையான முன்னேற்றங்கள் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
மக்களவையில் இன்று தேசிய ஏ.ஐ. அலுவலகம் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் ஏ.ஐ. வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்து குபாங் பாசு பெரிக்கத்தான் நேஷனல் உறுப்பினர் டத்தோ வீரா கு அப்துல் ரஹ்மான் கு இஸ்மாயில் எழுப்பி கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
தொழில்நுட்பத்தின் நன்மைகள் பொருளாதாரத்திற்கும் மக்களுக்கும் அதிகபட்சமாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, தரவு திறன் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தேசிய ஏ ஐ. 2026–2030 செயல் திட்டத்தை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப இந்த சாதனை அமைந்துள்ளது.