ஜோகூர்பாரு, ஆகஸ்ட் 11 - 2024ஆம் ஆண்டில் மடாணி பி.எம்.கே.எஸ் டிஜிட்டல் மானியத்தின் (GDPM) கீழ் நாடு முழுவதும் மொத்தம் 38,804 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) வெற்றிகரமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டன. இதற்கு RM89.6 மில்லியன் அங்கீகரிக்கப்பட்ட நிதியுதவி வழங்கப்பட்டது.
மலேசிய மருத்துவச் சங்கம், எம்.எம்.ஏ-இன் தரவுகள் அடிப்படையில் அந்த எண்ணிக்கையில் சுமார் 19 விழுக்காடு சிகிச்சையகம் மற்றும் மருந்தகத்தை உள்ளடக்கி இருப்பதாக தொடர்புத் துறை துணை அமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.
"இவ்வாண்டு இன்னும் அதிகமான தனியார் சிகிச்சையகங்களையும் மருந்தகங்களையும் இலக்கவியல்மயமாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த மானியத்தின் வழி குறைந்தது 50 விழுக்காட்டு சிகிச்சையகங்களும் மருந்தகங்களும் பயன்பெற வேண்டும் என்பதே எங்களின் இலக்கு," என்றார் அவர்.
மேலும், தொலைத்தொடர்பு சேவைக்காக, 2024ஆம் ஆண்டில் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி-க்கு அரசாங்கம் 9 கோடி ரிங்கிட்டை வழங்கிய வேளையில், கிட்டத்தட்ட அத்தொகை முற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாண்டு, கூடுதலாக ஐந்து கோடி ரிங்கிட்டை நிதி அமைச்சு ஒதுக்கியுள்ள வேளையில், அத்தொகையில் பி.எம்.கே.எஸ் குறிப்பாக சுகாதாரத் துறையை வலுப்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் மூன்று கோடி ரிங்கிட் எம்சிஎம்சி-க்கு வழங்கப்பட்டுள்ளதாக தியோ நி சிங் தெரிவித்தார்.
இன்று, ஜோகூர் பாருவில், 2025ஆம் ஆண்டு GDPM Fest எனும் நிகழ்ச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தியோ இவ்வாறு கூறினார்.
பெர்னாமா