ஷா ஆலம், ஆக. 10- கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி நிலையிலான 2025 தேசிய தின வாகன அணியின் ஊர்வலம் நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது. மிகுந்த உற்சாக உணர்வுடன் கூடிய இந்நிகழ்வில் தேசபக்தியும் நாட்டை நேசிக்கும் உணர்வும் பரிமளிப்பதைக் காண முடிந்தது.
நாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன் அலுவலகத்தால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த வாகன அணி ஸ்ரீ மூடாவிலிருந்து சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் 7வது மண்டலம் நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது. தேசிய தின உணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக தேசியக் கொடி பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் நான்கு சக்கர இயக்க வாகனங்கள் உட்பட பல்வேறு வாகனங்கள் தொகுதி முழுவதும் வலம் வந்தன.
மெர்டேக்கா மாதத்தை முன்னிட்டு கொடியேற்றும் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கும் முயற்சியின் அடையாளமாக வழி நெடுக வாகனத் அணி பங்கேற்பாளர்கள் பொதுமக்களுக்கு தேசிய கொடியை விநியோகித்தனர்.
இது வெறும் வெறும் வாகன அணிவகுப்பு மட்டுமல்ல. மாறாக, பல்லின மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட மலேசியர்களின் ஒற்றுமையின் சின்னமாகும். நாட்டின் சுதந்திரத்தை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட கோத்தா கெமுனிங் மக்கள் கைகோர்ப்பதைக் கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று பிரகாஷ் சாம்புநாதன் கூறினார்.
தேசபக்தி பாடல்கள் பாடுதல் மற்றும் நினைவு புகைப்பட அமர்வு ஆகியவை இந்த நிகழ்ச்சி மேலும் மெருகூட்டின. இந்த வாகன அணியை உள்ளூர் சமூகத்தினர் மகிழ்ச்சியான சூழலில் வரவேற்றனர்.
கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் தேசிய தின வாகன அணிவகுப்பு
10 ஆகஸ்ட் 2025, 11:53 AM