ஷா ஆலம், ஆக. 10- அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் உலகம் கண்டு வரும் துரித மாற்றங்களை எதிர்கொள்வதற்கு இன்றைய தலைமுறையினரையும் தயார்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவுப் (ஏ.ஐ.) பயிற்சியை கோத்தா கெமுனிங் மிகச் சிறப்பான முறையில் தொகுதி நடத்தியது.
இங்குள்ள கெனங்கா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் தொழில்நுட்ப நிபுணர்கள், தொழில் துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் சமூக தலைவர்கள் உள்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.
இந்த தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை சமூகத்திடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் கோத்தா கெமுனிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் இந்த செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த கருத்தரங்கில் செயற்கை நுண்ணறிவின் தினசரி பயன்பாடுகள், பல துறைகளில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் எதிர்காலத்தில் தொழில்நுட்ப அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் போன்றவை குறித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
துரித முன்னேற்றம் கண்டு வரும் செயற்கை நுண்ணறிவு இன்று தொழில், கற்றல் மற்றும் தொடர்பு உள்பட அனைத்து துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக பிரகாஷ் தமதுரையில் குறிப்பிட்டார்.
ஏ.ஐ. என்பது புதிய சொல் மட்டும் அல்ல. அது ஏற்கனவே நமது வாழ்வின் ஓர் அங்கமாகியுள்ளது. இந்த கருத்தரங்கின் மூலம் கோத்தா கெமுனிங் மக்களை இந்தத் தொழில்நுட்பத்திற்குத் தயார்படுத்தும் அதேவேளையில் அவர்களை போட்டித்தன்மை உடையவர்களாகவும் மின்னியல் யுகத்தில் முன்னணி வகிப்பவர்களாகவும் மாற்றுவது எங்களின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள், தொழில்முனைவோர், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டதானது, தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்திருப்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது என்றார் அவர்.
இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் இவ்வட்டார மக்களின் நலனுக்காக கல்வி மற்றும் புத்தாக்க துறையில் ஆற்றலை மேம்படுத்தக்கூடிய இத்தகைய நிகழ்ச்சிகளை எதிர்காலத்தில் மேலும் அதிகளவில் நடத்தவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் இடம் பெற்ற கலந்துரையாடல் , கேள்வி-பதில் அங்கம் போன்றவை பங்கேற்பாளர்களின் உற்சாகமான வரவேற்பைப் பெற்றன.
கோத்தா கெமுனிங் தொகுதியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு- 300 பேர் பங்கேற்பு
10 ஆகஸ்ட் 2025, 8:51 AM