ஷா ஆலம், ஆக. 7 - பெட்டாலிங் ஜெயா, டேசா ரியா கருப்பர் காளியம்பாள் ஆலயம் எதிர்நோக்கியுள்ள நில விவகாரம் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் பொருட்டு மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு நேற்று கள வருகை மேற்கொண்டார்.
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற (எம்.பி.பி.ஜே ) வளர்ச்சித் திட்டமிடல் மற்றும் அமலாக்கத் துறை, ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதியின் இந்திய சமூகத் தலைவர் மற்றும் பெட்டாலிங் நிலம் மற்றும் மாவட்ட அலுவலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த கள ஆய்வில் கலந்து கொண்டனர்.
அரசு நிலத்தில் கட்டப்பட்ட அந்த ஆலயத்தின் நில உரிமை குறித்து எழுந்த பிரச்சினையைத் தொடர்ந்து இந்தப் பயணத்தை தாம் மேற்கொண்டதாக அவர் தனது முகநூல் பதிவில் கூறினார்.
இந்த ஆலய நில விவகாரம் தொடர்பில் மாநில அரசு எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு நிலத்தின் நிலை மற்றும் விண்ணப்பத்தின் பின்னணி குறித்து முழுமையான அறிக்கையை பெட்டாலிங் நிலம் மற்றும் மாவட்ட அலுவலகம் வழங்க வேண்டும் என்று தாம் கேட்டுக் கொண்டுள்ளதாகப் பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
மாநிலத்தில் வாழும் பல இன,சமய சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக திறந்த மற்றும் மரியாதைக்குரிய பேச்சுவார்த்தைகள் மூலம் நியாயமான மற்றும் விவேகமான தீர்வை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.
தாமான் டேசாரியா, கருப்பர் சாமி காளியம்மாள் ஆலய நில விவகாரம் - பாப்பாராய்டு நேரில் ஆய்வு
7 ஆகஸ்ட் 2025, 8:55 AM