புத்ராஜெயா, ஆக. 7- எதிர்வரும் அக்டோபர் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2026 வரவு செலவுத் திட்டம் அண்மையில் வெளியிடப்பட்ட 13வது மலேசியத் திட்டத்தின் இலக்குகளை ஆதரிக்கும் பட்ஜெட்டாக விளங்குகிறது.
உச்சவரம்பை உயர்த்துதல், அடித்தள வரம்பை உயர்த்துதல் மற்றும் பொது நிர்வாகத்தில் நல்லாட்சியை வலுப்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய கூறுகளில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தும். 2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் எதிர்வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற நிகழ்ச்சி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்சவரம்பை உயர்த்துவதன் மூலம் நாட்டின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதையும் உயர் வளர்ச்சி, அதிக தாக்கம் உள்ள துறைகள், குறிப்பாக செமிகண்டக்டர், எரிசக்தி மாற்றம் மற்றும் இஸ்லாமிய பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதையும் அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது என்று இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமிர் ஹம்சா அஸிசான் கூறினார்.
‘மலேசியாவில் உருவாக்கப்பட்ட‘ பொருள்களின் உற்பத்தியாளர்களாக ஆவதற்கு ஏதுவாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளோடு தொடக்க நிறுவனங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளித்து வரும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஆக்கத்திறனை வலுப்படுத்தும் மற்றும் மதிப்பு அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முயற்சிகளை தொடரும் அதேவேளையில் இலக்கவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பணி நிரலுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று 2026 பட்ஜெட் தொடர்பான மன்றக் கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்வில் பொதுச் சேவை கழகங்கள், தொழில்துறையினர், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள், கல்விமான்கள், அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துலக அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.