புத்ராஜெயா, ஆக. 7 - காஸா தீபகற்பத்தை இராணுவ ரீதியாக முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் அண்மைய முடிவை மலேசியா கடுமையாகக் கண்டித்துள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேலின் இனவெறிக் கொள்கைகளை அனைத்து நாடுகளும் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்று அது கோரிக்கை விடுத்தது.
இந்த திட்டமிட்ட மற்றும் இரக்கமற்ற நடவடிக்கை, பாலஸ்தீன பிரதேசத்தை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கான இஸ்ரேலிய ஆட்சியின் தெளிவான நோக்கத்தை நிரூபிக்கிறது என்று வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையில் கூறியது.
இத்தகைய நடவடிக்கை அனைத்துலகச் சட்டத்தை மீறுவதோடு மட்டுமல்லாமல் மனித உரிமைகள் மற்றும் நீதியின் கொள்கைகளையும் சிறுமைப்படுத்துகிறது.
கடந்த 22 மாதங்களாக நிகழ்த்தப்பட்ட இடைவிடாத குண்டுவீச்சு மற்றும் முற்றுகை காரணமாக காஸாவின் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கட்டாயமாக இடம்பெயர்ந்த நிலையில், இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை இரு நாட்டுத் தீர்வை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இஸ்ரேல் தன்னிச்சையாக செயல்படுவதை தொடர்ந்து நியாயப்படுத்தப்படும் பட்சத்தில் அனைத்து சமாதான முன்னெடுப்புகளும் புதைக்கப்பட்டு பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமை மீண்டும் மறுக்கப்படும்.
இஸ்ரேலின் இனவெறிக் கொள்கைகளை உறுதியாக நிராகரிக்கவும், 1967ஆம் ஆண்டுக்கு முந்தைய எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு ஜெருசலத்தை தலைநகராகக் கொண்ட பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்கவும் மலேசியா அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொள்கிறது.
நிரந்தர போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதை உறுதி செய்து, இஸ்ரேலிய ஸியோனிஸ ஆட்சிப் படைகளை காஸாவிலிருந்து முழுமையாக வெளியேற்றி மனிதாபிமான உதவிகளை அணுகுவதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனடியாக நிறைவு செய்ய வேண்டும்.
அதோடு உதவிகள் தடையின்றி நுழைவதையும் ஐக்கிய நாடுகள் சபையின் முழு உறுப்பினர் அந்தஸ்து பாலஸ்தீன அரசுக்கு கிடைப்பதையும் உறுதி செய்யுமாறும் மலேசியா அனைத்து நாடுகளையும் வலியுறுத்துகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
காஸாவை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்- மலேசியா கண்டனம்
7 ஆகஸ்ட் 2025, 4:30 AM