ஷா ஆலம், ஆக. 6 - ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை உள்ளடக்கிய மேம்பாட்டுத் திட்டங்களில் குறைந்தபட்சம் 1 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட நிலம் ஆலயங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு வலியுறுத்தியுள்ளார்.
ஒரு ஏக்கர் பரப்பளவு என்பது மேம்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் வெறும் 0.1 விழுக்காடு மட்டுமே ஆகும் என அவர் தெரிவித்தார்.
கார் நிறுத்துமிடம் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கு கூடுதல் பரப்பளவிலான நிலம் தேவைப்படுவதாக லீமாஸ் எனப்படும் பெளத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோ சமய செயல்குழுவின் இணைத் தலைவருமான அவர் இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
வழிபாட்டுத் தலத்திற்கான குறைந்தபட்ச பரப்பளவு 10,000 சதுர அடியாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தை நான் வரவேற்கிறேன்.
இருப்பினும், அதிக பக்தர்கள் வரக்கூடிய அல்லது வருடாந்திர விழாக்களை ஏற்பாடு செய்யும் கோயில்களுக்கு இந்த அளவு நிலம் போதுமானதாக இல்லை.
ஆகவே, வாகன நிறுத்துமிடம் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கான மையம் உட்பட முழுமையான வசதிகளை ஏற்படுத்த குறைந்தபட்சம் 1 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட இடம் வழங்கப்பட வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன் என்றார் அவர்.
சிலாங்கூரில் உள்ள முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்த பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுவனத்தின் நடவடிக்கையை தாம் பாராட்டுவதாகப் பாப்பாராய்டு கூறினார்.
இது பெருநிறுவன அக்கறையை மட்டுமல்லாது ஒரு காலத்தில் தங்களின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்நிறுவனத்தின் பங்களிப்பையும் அங்கீகரிப்பையும் பிரதிபலிக்கிறது என்றார் அவர்.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி கோல சிலாங்கூரில் பிரதமரால் தொடங்கப்பட்ட ரூமா மடாணி வீட்டுடைமைத் திட்டம் அரசு- தனியார் ஒத்துழைப்பின் வழி கிட்டிய வெற்றியின் வெளிப்பாடாகும் என அவர் குறிப்பிட்டார்.
தோட்ட உரிமையாளர்கள் மற்றும் மேம்பாட்டாளர்களிடம் ஒரு முக்கியமான கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன்:
1. தோட்டத் தொழிலாளர்களின் மனித வளத்தை வளர்ப்பதற்கான உங்கள் நீண்டகால திட்டம் என்ன?
2. பொருளாதாரச் சங்கிலியில் அவர்கள் முன்னேற உதவும் வகையிலான மறுதிறன் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் என்ன?
தோட்டத் தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பதை நாம் அனுமதிக்க முடியாது.
நமது தொழிலாளர்களை வெளிநாட்டு கூலித் தொழிலாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டிய சுமைகளாக அல்லாமல் கூடுதல் மதிப்பைக் கொடுக்கக்கூடிய சொத்துக்களாகக் கருத வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.