ஷா ஆலம், ஆக.6- பழைய தோட்டக் குடியிருப்புகளில் இன்னும் வசித்து வரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக மறைமுகமாக நடத்தப்படும் அடக்குமுறை குறித்து மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
சொந்தமாக குடிநீர் விநியோக மீட்டர்களை பெறுவதற்கான உரிமை மறுக்கப்பட்ட பந்திங், சுங்கை சீடு தோட்டப் பாட்டாளிகளை தாம் நேரில் சந்தித்து பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு கூட்டு மீட்டரை பொருத்தியுள்ள காரணத்தால் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திற்கு குடிநீர்க் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையை தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர். இந்த விஷயத்தில் தொழிலாளர்கள் பலிகடாவாக ஆக்கப்படுவதோடு நீர்க் கட்டண பாக்கிக்கு பொறுப்பேற்க வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகின்றனர் என்று அவர் கூறினார்.
இதனால் மாநில அரசு குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்காக ஏற்பாடு செய்துள்ள இலவச குடிநீர்த் திட்டத்திலும் தோட்டத் தொழிலாளர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இந்த செயல் அநீதியானது என்பதோடு மனிதாபிமானமும் இல்லாதது. குறைந்த வருமானத்தில் முழுமையற்ற வாழ்க்கையை வாழ்ந்து வரும் தொழிலாளர்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
தோட்டத் தொழிலாளர்கள் மாநில அரசின் இலவச குடிநீர்த் திட்டத்தில் பங்கேற்பதற்கு எதுவாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் வீடுகளுக்கு தனி மீட்டர்களை பொருத்துவதற்கான செலவை நானே ஏற்றுக் கொண்டேன் என தெரிவித்தார்.
இதுதான் சமூக நலக் கடப்பாடு எனப்படுகிறது. தலைமைத்துவம் என்பது கொள்கைகள் சார்ந்ததாக மட்டுமின்றி ஒடுக்குமுறைக்கு ஆளானவர்களுக்கு கரம் நீட்டி உதவுவதையும் நோக்கமாக கொண்டது என்றார் அவர்.