ஷா ஆலம், ஆக. 5 - போலீஸ் சோதனையிலிருந்து காரில் தப்ப முயன்ற இரு சகோதரர்களை பிடிப்பதற்கு ஷா ஆலம் வட்டாரத்தில் நடந்த 90 கிலோ மீட்டர் துரத்தல் நாடகம் இங்குள்ள சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகம் எதிரே இறுதியாக முடிவுக்கு வந்தது.
ஷா ஆலம், செக்சன் 7, வர்த்தக மையத்தில் போலீசார் மேற்கொண்ட சாலைத் தடுப்புச் சோதனையிலிருந்து தப்புவதற்கு நீல நிற புரோட்டோன் வீரா கார் ஒன்று முயன்ற போது இந்த துரத்தல் நாடகம் தொடங்கியது.
இன்று விடிற்காலை 1.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட அந்த காரை நிறுத்தும் நோக்கில் போலீசார் சைரன் ஒலியை எழுப்பியதோடு ஒலி பெருக்கியில் எச்சரிக்கையும் விடுத்ததாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.
எனினும், போலீசாரின் எச்சரிக்கையை மீறி அக்கார் சாலைத் தடுப்பை தாண்டி வேகமெடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆறு ரோந்து வாகனங்களின் உதவியுடன் போலீசார் அக்காரை துரத்தத் தொடங்கினர்.
சுமார் ஒரு மணி நேர துரத்தல் நாடகத்திற்குப் பிறகு செக்சன் 9இல் அமைந்துள்ள சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தின் நுழைவாயில் அருகே அக்காரை போலீசார் வெற்றிகரமாக மடக்கினர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அக்காரை சோதனையிட்ட போது அதில் 18 மற்றும் 24 வயதுடைய இரு மலாய் சகோதரர்கள் இருந்தனர். எந்த அசம்பாவிதமும் இன்றி அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அக்காரை சோதனையிட்ட போது முன்புற பயணியின் இருக்கைக்கு அடியில் கெத்தும் என சந்தேகிக்கப்படும் பானம் அடங்கிய போத்தல் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது என்றார் அவர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 24 வயதுடை இளைஞருக்கு போதைப் பொருள் தொடர்பான முந்தையக் குற்றப்பதிவுகள் இருப்பது தெரியவந்தது. எனினும் அவரின் இளைய சகோதரருக்கு எந்த குற்றப்பதிவும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கப் பணியாளரை வேலை செய்ய விடாமல் தடுத்தது தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 186வது பிரிவு மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்களை வைத்திருந்தது தொடர்பில் 1952ஆம் ஆண்டு விஷப்பொருள் சட்டத்தின் 30(3)வது பிரிவின் கீழ் அவ்விருவருக்கும் எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் சொன்னார்.