ஷா ஆலம், ஆக. 5 - ஆடவர் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற வழிப்பறி கொள்ளையனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.
இச்சம்பவம் செத்தியா ஆலம், ஜாலான் செத்தியா பிரிமாவில் நேற்றிரவு 7.07 மணிக்கு நிகழ்ந்தது.
தனது காரை நோக்கிச் சென்று கொண்டிருந்த 37 உள்நாட்டு நபரை மோட்டார் சைக்கிளில் வந்த ஆடவன் அணுகி சங்கிலியைப் பறித்ததாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.
விரைந்து செயல்பட்ட பாதிக்கப்பட்ட நபர் கொள்ளையனிடமிருந்து அச்சங்கிலியை மீண்டும் பறித்தார். இதனால் 30 வயது மதிக்கத்தக்க அந்த கொள்ளையன் தடுமாறி மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தான்.
அங்கிருந்து தப்பியோட முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் வளைத்துப் பிடித்தனர். அந்த ஆடவன் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் போலி எண் பட்டையைப் பொருத்தியிருந்தது தொடக்க கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது என்று முகமது இக்பால் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கைதான சந்தேக நபரை விசாரணைக்காக எதிர்வரும் ஆகஸ்டு 7ஆம் தேதி வரை தாங்கள் தடுத்து வைத்துள்ளதாகக் கூறிய அவர், இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி சார்ஜன் முகமது ஹனாபி அப்துல் கனியுடன் 010-3728932 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த கொள்ளைச் சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 393வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது. முன்னதாக, ஆடவர் ஒருவர் கொள்ளையனுடன் மல்லுக்கட்டுவதைச் சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது