சிலாங்கூரின் வளர்ச்சிக்கு உதவ சிறு வர்த்தகத் துறைக்கு ஆதரவளிப்பீர்- மந்திரி புசார்
கிள்ளான், ஆக 2 - குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை உறுதி செய்ய தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றுமாறு அரசு நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் சமூகம் உள்ளிட்ட அனைத்து பங்களிப்பாளர்களும்
கேட்டுக் கொள்ளப்படுட்டுள்ளனர்.
இத்தகைய முயற்சிகள் இந்த வணிகத்துறை சந்தை ஆரோக்கியமாக வளரவும் போட்டியிடவும் உதவும் என்பதோடு இறுதியில் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கும் என்றும் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இன்றைய குறுந்தொழில் முனைவோர் நாளைய வெற்றிகரமான வணிக உரிமையாளர்களாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதுவரை 88,000க்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர் சிலாங்கூர் தளத்தின் (பிளாட்ஸ்) கீழ் பல்வேறு முன்னெடுப்புகளில் பதிவு செய்து இணைந்துள்ளனர்.
அவர்கள் டிஜிட்டல் கருவிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை பெறுவதோடு மட்டுமல்லாமல் பயிற்சி, நிதி உதவி ஆகியவற்றோடு வளர்ச்சிக்கான உள்ளடங்கிய வாய்ப்புகளையும் பெறுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு இங்கு நடைபெற்ற பிளாட்ஸ் விருதளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு கூறினார்.
இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமியும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
பிளாட்ஸ் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி (யு-பிளாட்ஸ்) திட்டத்தில் பங்கேற்ற தொழில்முனைவோரின் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் சிலாங்கூர் மந்திரி பெசார் கழகம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷாவின் தலைமை தாங்கினார்.
வெற்றியாளர்களாகத் தேர்வு பெற்ற18 பேருக்கு ராஜா மூடா இந்த நிகழ்வின் போது விருதுகளை வழங்கினார். அவர்கள் மொத்தம் 32,000 வெள்ளி ரொக்கப் பரிசு, வெற்றிக் கிண்ணம் மற்றும் பாராட்டுப் பதக்கங்களைப் பெற்றனர்.
மேலும், ஊராட்சி மன்ற நிலையில் மொத்தம் 12 சிறந்த குறுந்தொழில்முனைவோர் வெற்றியாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களுக்கு 12,000 வெள்ளி ஒருங்கிணைந்த ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
சிலாங்கூரின் வளர்ச்சிக்கு உதவ சிறு வர்த்தகத் துறைக்கு ஆதரவளிப்பீர்- மந்திரி புசார்
2 ஆகஸ்ட் 2025, 4:29 AM