புத்ரஜெயா, ஆகஸ்ட் 1: நாட்டின் கல்வி முறை பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்யும் முயற்சியாக, 13வது மலேசியா திட்டம் (13MP) மூலம் பாலர் பள்ளி முதல் இடைநிலைப்பள்ளி வரையிலான கல்வியில் முழு கவனம் செலுத்தப்படும். இந்த நடவடிக்கை கல்வி அமைச்சு மூலம் மேற்கொள்ளப்படும்.
புதிய பள்ளிகளைக் கட்டுதல், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை சரிசெய்தல் மற்றும் மேம்படுத்துதல் உள்ளிட்ட கல்வித் துறைக்கு RM67 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
"கல்வி (திருத்தம்) மசோதா 2025, இடைநிலைக் கல்வியை கட்டாயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இது சமீபத்தில் மக்களவையால் நிறைவேற்றப்பட்டது," என்று அவர் கூறினார்.
ஐந்து வயதிலிருந்து பாலர் பள்ளிக் கல்வியை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கை, மாணவர்களுக்கு முழுமையான மற்றும் விரிவான அடிப்படை கற்றல் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஃபட்லினா கூறினார்.
எனவே, இந்த முயற்சி வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் கல்வி அமைச்சின் கீழ் மேலும் பல பாலர் பள்ளிகள் திறக்கப்படும் என்று அவர் கூறினார்.