கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - சுகாதாரத் துறைக்கு ஆர்.எம்.கே 13இல் நான்காயிரம் கோடி ரிங்கிட் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சுகாதார சேவைக்கான மக்களின் செலவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
சமூகத்தின் அனைத்து தரப்பினரும் தரமான சுகாதார சேவையை பெறுவதை உறுதி செய்யும் வகையில், அரசாங்கத்தின் முக்கிய முயற்சியாக சுகாதார சீர்திருத்தம் அமைந்திருக்கிறது.
இதில் புதிய கட்டுமானங்கள், மோசமான நிலையில் இருக்கும் அரசாங்க மருத்துவமனைகள், சிகிச்சையகங்களின் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அன்வார் கூறினார்.
மேலும், சிரம்பான் துவாங்கு ஜாஃபார் 2 மருத்துவமனை, ஜோகூர் பாரு சுல்தான் அமினா 2 மருத்துவமனை, கெடா, சுங்கைப்பட்டாணி, வடக்கு மண்டல புற்றுநோய் மையம், சபா, கோத்தா கினாபாலு, குயின் எலிசபத் || மருத்துவமனையின் இருதய மையம் மற்றும் சரவாக் புற்றுநோய் மையம் ஆகியவை தரம் உயர்த்தப்படும்.
அதுமட்டுமில்லாமல், மருத்துவப் பொருட்களின் பாதுகாப்பை அதிகரிக்க, உள்நாட்டு மருந்து உற்பத்தியும் ஊக்குவிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.