ஷா ஆலம், ஜூலை 31- பதிமூன்றாவது மலேசியத் திட்ட அமலாக்க
காலத்தில் ஆண்டுக்கு 4.5 முதல் 5.5 விழுக்காடு வரை மொத்த உள்நாட்டு
உற்பத்தியைப் பதிவு செய்ய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
எதிர்வரும் 2026 முதல் 2030 வரையிலான ஐந்தாண்டு காலத்தில் பயனீடு
மற்றும் தனியார் துறையின் முதலீடுகள் வாயிலாக உள்நாட்டுத்
தேவையை ஈடுசெய்வதன் மூலம் இந்த வளர்ச்சியை பதிவு செய்ய
இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறினார்.
விரிவான வர்த்தக வாய்ப்புகள் வாயிலாக நிகர ஏற்றுமதி அளவை
ஆண்டுக்கு 5.8 விழுக்காடாக உயர்த்த முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக
அவர் சொன்னார்.
மதிப்பு உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்திற்கு
மாறுவதன் வாயிலாக சேவை, உற்பத்தி, மற்றும் கட்டுமானத் துறையின்
வளர்ச்சி முக்கிய ஆதாரமாக விளங்கும் என்று மக்களவையில் இன்று
13வது மலேசியத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் தெரிவித்தார்.