(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 31- சிலாங்கூர் மாநில மக்களுக்கு திறன் அடிப்படையிலான மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மாநில அரசு முன்னெடுத்து வருகிறது.
இந்நோக்கத்தின் அடிப்படையில் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வி.பாப்பாராய்டு மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மின் அரசியல் செயலாளரும் பண்டார் கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் கெல்வின் யி லீ வுயெனுடன் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று சந்திப்பு நடத்தினார்.
இச்சந்திப்பின் போது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி (திவேட்), கல்வி, விவசாயம், வாகன சொழில் துறை, பாதுகாப்பு மற்றும் சிலாங்கூர் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்கும் திறன் கொண்ட பல்வேறு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் குறித்து தாங்கள் விவாதித்ததாக அவர் சொன்னார்.
நான் நாடாளுமன்றத்தில் இருந்தபோது தொடக்கக் கல்வியிலிருந்து இடைநிலைக் கல்வி வரை கட்டாயக் கல்விக் கொள்கையை விரிவுபடுத்துவது தொடர்பான 2025ஆம் ஆண்டு
கல்வி (திருத்த) மசோதா மக்களவை உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டது
நாட்டில் குடிமகனாகப் பிறந்த அனைத்து சிறாருக்கும் சிறந்த கல்வியைப் பெறுவதற்கான உரிமை உள்ளதோடு ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் எஸ்.பி.எம். வரையிலாவது கல்வியை முடிக்க வேண்டும் என்றும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
இந்த அணுகுமுறை தற்போது விவாதிக்கப்படும் கல்வி மசோதாவில் உள்ள எதிர்பார்ப்புக்கும் உணர்வுகளுக்கும் ஏற்ப உள்ளது. பிரதமர் தலைமையிலான தற்போதைய மடாணி அரசாங்கத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
இது தொழில்துறையின் தற்போதைய தேவைகளுக்கும் எதிர்கால தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கும் ஏற்ற வகையில் உள்ளடங்கிய, தரமான மற்றும் பொருத்தமான கல்வி மற்றும் திறன் பயிற்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதற்கான கொள்கைகள் மற்றும் முயற்சிகளை இது தொடர்ந்து வலுப்படுத்துகிறது என பாப்பாராய்டு குறிப்பிட்டார்.