புத்ராஜெயா, ஜூலை 31- கோழி முட்டைக்கான உதவித் தொகையை
மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கை நாளை (ஆகஸ்டு 1ஆம் தேதி) முதல்
அமலுக்கு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நீடித்த மற்றும் உயர்
தாக்கம் கொண்ட உதவித் தொகை மறுசீரமைப்புத் திட்டத்தை கட்டங்
கட்டமாக மேற்கொள்ளும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த
அறிவிப்பு அமைந்துள்ளது.
நியாயமான விலையில் கிடைக்கக் கூடிய சிறப்பு பிரிவு முட்டையை
அறிமுகப்படுத்த அந்த உணவுப் பொருள் தொழில்துறையினர் ஒப்புக்
கொண்டுள்ளதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு
அறிக்கை ஒன்றில் கூறியது.
கோழி முட்டையின் சீரான விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிக்கும்
வகையிலும் அதன் விலை சீராக இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும்
இந்த உடனடி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அது தெரிவித்தது.
நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் ஜூவாலான் அக்ரோ மடாணி மற்றும்
ஜூவாலான் ரஹ்மா மலிவு விற்பனைத் திட்டங்களின் வாயிலாக
கட்டுபடி விலையில் முட்டைகளை பொது மக்கள் வாங்கலாம் என்று
அமைச்சு அவ்வறிக்கையில் கூறியது.
கோழி முட்டைகளின் விநியோகம் சீராகவும் போதுமான அளவிலும்
இருப்பதை உறுதி செய்வதில் தொழில்துறையினருக்கு உள்ள ஆற்றல்
மீதான நம்பிக்கையை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2024 டிசம்பர் வரை கோழி
முட்டைக்கான உதவித் தொகையை ஈடு செய்வதற்கு அரசாங்கம் 250
கோடி வெள்ளியை செலவிட்டுள்ளது.
இந்த தொகை மிகப் பெரியது. பெருந்தொற்று மற்றும் அனைத்துலக
விநியோக சங்கிலியில் ஏற்பட்ட இடையூறு ஆகியவற்றைக் கருத்தில்
கொண்டு தற்காலிக அடிப்படையில் இந்த உதவித் தொகை திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டது என்று அமைச்சு விளக்கியது.