ஜகார்த்தா, ஜூலை 31- கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை ஆதரிக்கும் அதே வேளையில் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் எல்லை தாண்டிய இணைப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், ஒப்புக் கொண்டனர்.
வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி இந்தோனேசியாவில் நடைபெறும் முதலாவது மலேசியா-இந்தோனேசிய முதலீட்டு ஒத்துழைப்பு பணிக்குழு கூட்டத்தை இரு தலைவர்களும் வரவேற்றதாக ஜகார்த்தாவில் நேற்று நடைபெற்ற 13வது வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் கூறப்பட்டது.
உள்கட்டமைப்பு, மின்னணுவியல், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்ற துறைகளில் புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளை இரு தலைவர்களும் கவனத்தில் கொண்டனர்.
மேலும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கார்பன் வர்த்தகம் உள்ளிட்ட நிலைத்தன்மை முயற்சிகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான கடப்பாட்டை இரு தலைவர்களும் வெளிப்படுத்தினர் என்று மலேசிய வெளியுறவு அமைச்சு நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்தோனேசியாவின் நுசாந்தாரா தலைநகரில் குறிப்பாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் ஹைட்ரஜன் வளர்ச்சியில் மலேசியாவின் தொடர்ச்சியான முதலீட்டை பிரபோவோ வரவேற்றார்.
தீபகற்ப மலேசியா மற்றும் சுமத்ரா இடையே எல்லை தாண்டிய குறைந்த கார்பன் எரிசக்தி வர்த்தகத்தை ஆராய்வதற்கும் பிராந்திய ஒருங்கிணைப்பை மேம்படுத்த நேரடி தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
இவ்வாண்டு கூட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் குழுவின் நான்காவது கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்பதோடு தெபெடு-என்திகோங் எல்லையில் வர்த்தகத்தை இயல்பாக்குவதை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.