டுங்குன், ஜூலை 27- இங்குள்ள குகுசான் ரசாவ் கெர்த்தே அருகே ஜாலான் கிலாங் கெளாப்பா சாவிட் எனுமிடத்தில் நேற்று மாலை 6.00 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு தாயும் 18 மாதப் பெண் குழந்தையும் பலியான வேளையில் குடும்ப உறுப்பினர்கள் நால்வர் காயமடைந்தனர்.
இருபத்தைந்து வயதான நூர் சுஹைல்லா அஸ்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் அவரது மகள் நூர் ஐரா ஹுமைரா முகமது ஷரோல் இங்குள்ள கெத்தெங்கா ஜெயா சுகாதார மையத்திற்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக டுங்குன் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் மைசுரா அப்துல் காடீர் தெரிவித்தார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவரின் கணவர் முகமது ஷரூல் நிஜாம் ஹம்சா (வயது 32) மற்றும் அவரது மூத்த மகள் நூர் ஐஸ்யா ஹுமைரா (வயது 3) ஆகியோர் லேசான காயங்களுக்கு ஆளானதாக அவர் கூறினார்.
முகமது ஷரூலின் தாயாரான 73 வயது தீமா முகமது மற்றும் அவரது மகன் ருசைமி அப்துல் ரஷீத் (வயது 48) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடந்த போது பாதிக்கப்பட்ட அனைவரும் டுங்குன் நகரத்திலிருந்து ஃபெல்டா கெர்தே 4 இல் உள்ள தங்கள் வீட்டிற்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தனர் என் நம்பப்படுகிறது என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக டுங்குன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைகாக அதே மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மைசுரா கூறினார்.