(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 27- மக்களை ஏழ்மை நிலைலிருந்து மீட்டு அவர்களின் வாழக்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அத்திட்டங்களில் ஒன்றுதான் செஜாத்தி மடாணி திட்டம்.
இத்திட்டத்தின் கீழ் விவசாயம், மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல திட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிதியுதவி வழங்கி அவர்களுக்கு தேவையான ஆலோசனையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்களில் பத்து ஆராங்கைச் சேர்ந்த தேவசெல்வன் அந்தோணிசாமியும் ஒருவராவார்.
ரவாங் சட்டமன்றத் தொகுதி இந்திய சமூகத் தலைவருமான தேவசெல்வன் மத்திய அரசின் உதவியுடன் மீன் வளர்ப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
அரசாங்கம் வழங்கிய 50,000 வெள்ளி மானியத்தில் பத்து ஆராங்கில் உள்ள தனது சொந்த நிலத்தில் இந்த மீன் வளர்ப்புத் திட்டத்தை கடத்தாண்டு அக்டோபர் மாதம் தாம் ஆரம்பித்ததாக தேவசெல்வன் மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
.தலா 400 காலன் அளவிலான எட்டு பிளாஸ்டிக் தொட்டிகளில் சுமார் 2,000 சிவப்பு நிற தெலாப்பியா வகை மீன்கள் இத்திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த மீன் வளர்ப்புத் திட்டத்தை முறையாக மேற்கொள்வதற்கு ஏதுவாக பல்வேறு அடிப்படை வேலைகளை செய்ய வேண்டியிருந்தது. அப்பணிகளை முடித்தப் பின்னர் மீன் வளத்துறையிடமிருந்து பெறப்பட்ட மீன் குஞ்சுகளை ஒவ்வொரு தொட்டியிலும் தலா 150 என்ற எண்ணிக்கையில் வளர்க்கத் தொடங்கினோம்.
மற்ற தொழில்களைப் போலவே மீன் வளர்ப்பிலும் கடுமையான உழைப்பும் மிகுந்த கவனிப்பும் தேவைப்படுகிறது. மீன்கள் , நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வளர்வதற்கு அதிக சிரத்தை எடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, நீர், பிராணவாயு, உணவு ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட அளவிலும் தரத்திலும் இருப்பது அவசியம் என அவர் சொன்னார்.
இவ்வாறு தொட்டிகளில் வளர்க்கப்படும் மீன்கள் ஆறு மாத காலத்தில் நன்கு வளர்ந்து விற்பனைக்கான பக்குவத்தை எட்டி விடும். முதல் கட்டமாக நாங்கள் வளர்த்த மீன்கள் கடந்த இம்மாதம் விற்பனைக்கு தயாராகி விட்டன. இதன் வழி செஜாத்தி மடாணி திட்டத்தின் மூலம் எங்களுக்கு வழங்கப்பட்ட இந்த மீன் வளர்ப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம் என தேவசெல்வன் குறிப்பிட்டார்.
வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்பும் மற்றும் சுயத் தொழில் செய்ய விரும்புவோர் இதுபோல் மீன் வளர்ப்பு அல்லது விவசாயத் திட்டங்களில் ஈடுபடலாம். நாம் கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கும் பட்சத்தில் அனைத்தும் சாத்தியம் என்கிறார் அவர்.
மீன் வளர்ப்பு திட்டம் மூலம் கிடைத்த அனுபவத்தை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள தாம் தயாராக இருப்பதாக கூறிய தேவசெல்வன், ஆர்வமும் கடுமையாக உழைப்பதற்கு தயாராகவும் உள்ளவர்கள் மீன் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் ஈடுபடுவதன் மூலம் கணிசமான வருமானத்தைப் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றார்.
.உபரி வருமானம் பெற்று வாழ்க்கையில் உயரிய நிலையை அடைவதற்கு உதவக்கூடிய திட்டங்களில் ஒன்றாக விளங்குவது செஜாத்ரா கம்யூனிட்டி மடாணி (செஜாத்தி மடாணி) திட்டமாகும்.
இந்த முன்னெடுப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகள் அல்லது தனிநபர்களுக்கு பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள வெ.50,000 முதல் வெ.100,000 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை ஐ.சி.யு. எனப்படும் பிரதமர் துறையின் அமலாக்க கண்காணிப்புப் பிரிவு மற்றும் மாவட்ட அலுவலகங்கள் கண்காணிக்கும்.