(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 27- இந்திய சமய மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிகளுடன் ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் அஸ்மி நேற்று சந்திப்பு நடத்தினார்.
ஸ்ரீ செர்டாங் தொகுதி சேவை மையத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மலேசிய இந்து சங்க செர்டாங் வட்டாரப் பேரவையின் தலைவர் சந்துரு கணேசன் தலைமையில் தொகுதியிலுள்ள தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள், சமூக அமைப்புகளைப் பிரதிநிதித்து 20 பேர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது வழிபாட்டுத் தலங்களின் வசதிகள், சமய நடவடிக்கைகள் மற்றும் இந்திய சமூகத்தின் நலன் தொடர்பான பல பிரச்சினைகள் எழுப்பப்பட்டதாக தொகுதி உறுப்பினர் அப்பாஸ் அஸ்மி தனது முகநூல் பதிவில் கூறினார்.
இச்சந்திப்பில் கலந்து கொண்டவர்களின் கருத்துகளை தாங்கள் கவனமாகக் கேட்டறிந்ததாகவும் சமூகத்தின் குரல்கள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து செயல்பட தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்
ஒரு தொகுதியின் வலிமை பல்வேறு மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பரஸ்பர மரியாதை உணர்வில் உள்ளது என்று நான் நம்புகிறேன். இறைவன் அருளால் ஸ்ரீ செர்டாங் தொகுதியின் பொதுவான செழிப்புக்காக ஒற்றுமையை வலுப்படுத்தி அனைத்து சமூகங்களின் நலன்களைப் பாதுகாப்போம் என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இத்தொகுதியில் உள்ள இந்திய அமைப்புகள் எதிர்நோக்கும் மானியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு இச்சந்திப்பு நடத்தப்பட்டதாக சந்நுரு கணேசன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பல்வேறு விவகாரங்களை முன்வைத்தனர். அவற்றை கேட்டறிந்த அவர், தொகுதி மக்களின் நலனுக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பாடுபட அழைப்பு விடுத்தார் என சிலாங்கூர் மாநில இந்து சங்கத்தின் கல்வி மற்றும் தகவல் பிரிவுத் தலைவருமான அவர் தெரிவித்தார்