கோலாலம்பூர், ஜூலை 27- இங்குள்ள டாத்தாரான் மெர்டேகாவில் நேற்று பேரணியின் பயன்படுத்தப்பட்ட பிரதான மேடை உரிய பாதுகாப்புத் தரத்தைக் கொண்டிருக்கத் தவறியது மாநகர் மன்றத்தின் சோதனையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அது அகற்றப்பட்டது.
நிகழ்வின் போது பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய உண்மையான திறனைக் கருத்தில் கொள்ளாமல் அந்த மேடை கட்டப்பட்டது சோதனைகளில் தெரியவந்துள்ளது என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ முகமது யுசுப் ஜான் கூறினார்.
அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் அந்த மேடை கட்டப்பட்டது, மேலும் அதன் பாதுகாப்பு திறன் தொடர்பான விவரங்கள் எதுவும் அரச மலேசிய போலீஸ் படையிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அரச மலேசிய போலீஸ் படைக்கும் ஏற்பாட்டாளருக்கும் இடையேயிலான ஆரம்ப பேச்சுவார்த்தைகளில் இரண்டு நான்கு சக்கர இயக்க வாகனங்களை பயன்படுத்துவது குறித்து மட்டுமே உடன்பாடு காணப்பட்டது என அவர் தெளிவுபடுத்தினார்.
நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை மீறியதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் இப்போது ஆய்வு செய்து வருவதாகவும் சட்ட விதிகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
அந்த பேரணியில் பங்கேற்றவர்கள் டத்தாரான் மெர்டேக்காவுக்குச் செல்வதற்கு முன் மஸ்ஜிப் நெகாரா, சென்ட்ரல் மார்க்கெட், மஸ்ஜிட் ஜாமேக், சுல்தான் அப்துல் சமாட், கம்போங் பாரு, மற்றும் சோகோ பேரங்காடி ஆகிய இடங்களில் குழுமியிருந்தனர்.