குவாந்தான், ஜூலை 24 - முகநூலில் விளம்பரப்படுத்தப்பட்ட போலி முதலீட்டுத் திட்டங்களால் கவரப்பட்ட வர்த்தகர் ஒருவர் இரு தனித்தனி மோசடிகளில் சிக்கி 22 லட்சம் வெள்ளிக்கும் அதிகமானத் தொகையை இழந்தார்.
45 வயதான அந்த நபர் கடந்த மே மாதம் ஒரு திட்டத்தால் ஈர்க்கப்பட்டு வாட்ஸ்அப் மூலம் ஒரு நபரைத் தொடர்பு கொண்டதாக பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.
பின்னர் அவர் மே 14 முதல் ஜூலை 15 வரை ஆறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 18 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 18 பணப் பரிமாற்றங்களைச் செய்தார்.
இதன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு 20,000 வெள்ளிக்கும் அதிகமான வருமானம் கிடைத்தது.
இந்த லாபம் அவரை தொடர்ந்து முதலீடு செய்ய வைத்தது. இருப்பினும், கடந்த செவ்வாய்க்கிழமை 'விரைவான பண மீட்பு ' செயல்முறைக்கு கூடுதலாக 88,000 செலுத்துமாறு அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர் மறுப்பு தெரிவிட்டார்.
மேலும் 'செமாக் மியூல்' அகப்பக்கம் மூலம் சோதனை செய்த போது சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்குகளில் குற்றப் பதிவுகள் இருப்பது தெரியவந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட நபர் இதற்கு முன்பும் இதேபோன்ற மோசடியில் சிக்கியதாக கூறிய யாஹயா, இவ்வாண்டு பிப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 13 பரிவர்த்தனைகள் மூலம் 440,000 வெள்ளி இழந்ததாகச் சொன்னார்.
பாதிக்கப்பட்ட நபர் இந்த மோசடி தொடர்பில் நேற்று மாரான் மாவட்ட காவல் தலைமையகத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தண்டனைச் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.