(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 24- இவ்வாண்டு தாய்லாந்தில் நடைபெறவிருக்கும் சீ போட்டியில் பங்கேற்கவிருக்கும் கபடி விளையாட்டாளரான ஆனந்தி முனியாண்டிக்கு ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் 2,000 வெள்ளியை உதவி நிதியாக வழங்கியுள்ளார்.
அந்த கபடி விளையாட்டாளரின் பயிற்சி மற்றும் தயார் நிலை உள்ளிட்ட தேவைகளுக்கு உதவும் பொருட்டு இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக சுவா தெரிவித்தார்.
துடிப்பான மற்றும் தொலைநோக்கு சிந்தனை கொண்ட கபடி விளையாட்டாளரான ஆனந்தியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. இவ்வாண்டு தாய்லாந்தில் நடைபெறும் சீ போட்டியில் மலேசிய கபடிக் குழுவை அவர் பிரதிநிதிக்கிறார்.
இந்த சீ போட்டியில் நாட்டின் கபடிக் குழுவைப் பிரதிநிதித்து 12 பெண் விளையாட்டாளர்களும் 16 ஆண் விளையாட்டாளர்களும் பங்கேற்கின்றனர். அவர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வரும் அதே வேளையில் இந் போட்டிற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்கு தேவையான நிதியை திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்று சுவா குறிப்பிட்டார்.
அனைத்து விளையாட்டுகளுக்கும் அரசாங்கத்தின் ஏற்பாட்டு ஆதரவு கிடைத்து விடுவதில்லை எனக் கூறிய அவர், இவரைப் போன்ற விளையாட்டாளர்கள் சமுதாயத்தின் ஆதரவை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றார்.
இந்த விளையாட்டாளருக்கு ஆதரவைப் புலப்படுத்தும் விதமாகவும் .அவர் பயற்சியைத் தொடர்வதற்கு உதவும் நோக்கிலும் 2,000 வெள்ளியை நன்கொடையாக வழங்குகிறேன் என்று சுவா தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.
கபடி கவனிக்கப்படாத ஒரு விளையாட்டாக இருக்கலாம். ஆனால் சீ போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தருவதற்கான மிகபெரிய சாத்தியத்தை அந்த விளையாட்டு கொண்டுள்ளது. மலேசிய கபடிக் குழுவினர் மிகுந்த உற்சாகத்துடன் களமிறங்கி பதக்கத்தை வென்று நாட்டின் நற்பெயரை பரிமளிக்கச் செய்ய வாழ்த்துகிறேன் என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.