கோலாலம்பூர், ஜூலை 24 - தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக தீ மற்றும் புகைமூட்டம் ஏற்படும் அபாயம் உள்ளது.
அதனால், பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அறிவுறுத்தி உள்ளார்.
இந்த நிலைமையானது குறிப்பாக சிறார்கள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும் என்று அவர் கூறினார்.
பொதுமக்கள் தங்கள் சுகாதாரத்தில் அக்கறை கொள்வதோடு, அவ்வப்போது காற்றின் மாசுபாட்டு குறியீட்டை கண்காணிக்க வேண்டும் என்றும் தமது முகநூல் பதிவின் வழி மாமன்னர் நினைவுறுத்தினார்.
வெப்பமான மற்றும் வறண்ட வானிலையானது, தீ விரைவாகப் பரவுவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் அப்பதிவின் மூலம் எச்சரித்திருந்தார்.
மேலும், நாட்டின் காற்றின் தரத்தை பாதிக்கக்கூடிய எந்தவொரு திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்காக ரோந்துப் பணிகளை அதிகரிப்பதற்கும் மாமன்னர் உத்தரவிட்டுள்ளார்.
பெர்னாமா