பாசீர் பூத்தே, மார்ச் 1- இங்குள்ள ஜாலான் செமெராக் தோ அமான் பாலி, சுங்கை தோக் பாலியில் உள்ள தடாகம் ஒன்றில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி மாண்டான்.
மீன் பிடிப்பதற்காக அந்த தடாகத்திற்கு குடும்பத்தினருடன் சென்ற அந்த 12 வயதுச் சிறுவன் தனது குடும்ப உறுப்பினர்கள் இருவருடன் அங்கு குளித்துக் கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக தோக் பாலி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை கட்டளை அதிகாரி இப்ராஹிம் முகமது ரோஹ்னி கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று காலை 11.19 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீயணைப்புக் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
அந்த சிறுவனின் குடும்பத்தினர் மீன் பிடிப்பதற்காக பாச்சோக்கிலிருந்து அடந்த தடாகப் பகுதிக்கு வந்துள்ளனர். மீன் பிடித்தப் பின்னர் சக குடும்ப உறுப்பினர்களுடன் நீரில் குளித்துக் கொண்டிருந்த போது அச்சிறுவன் நீரில் மூழ்கி இறந்துள்ளான் என்று அவர் குறிப்பிட்டார்.
தீயணைப்பு வீரர்கள் அச்சிறுவனின் உடலை பிற்பகல் 12.22 மணியளவில் சுமார் மூன்று மீட்டர் ஆழத்திலிருந்து மீட்டதாக அவர் தெரிவித்தார்.
அச்சிறுவன் உயிரிழந்து விட்டதை சம்பவ இடத்திலிருந்த மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியதாகக் கூறிய அவர், மேல் நடவடிக்கைக்காக அச்சிறுவனின் உடல் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.