கோலாலம்பூர், ஜன. 12- வர்த்தக வாகன லைசென்ஸ்களுக்கான அங்கீகாரக் கடிதங்களைப் பெறுவது தொடர்பில் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் அரசு நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த மேலும் இரு பணியாளர்கள் மற்றும் ஒரு முன்னாள் ஊழியரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையும் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது.
முப்பது வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகிய மூவரையும் நேற்று தொடங்கி நான்கு நாட்களுக்குத் தடுத்து வைப்பதற்கான அனுமதியை புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்ற பதிவதிகாரி ஷியாருள் ஷியாஷி முகமது சாய்ன் வழங்கியதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய வட்டாரம் கூறியது.
அந்த மூவரும் புத்ராஜெயாவிலுள்ள எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக அந்த வட்டாரம் மேலும் குறிப்பிட்டது.
எம்.ஏ.சி.சி.யின் உளவுப் பிரிவு கடந்த 8ஆம் தேதி மேற்கொண்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சோதனை நடவடிக்கையில் நிறுவன இயக்குநர்கள் நால்வர் மற்றும் அரசு நிறுவன இயக்குநர் ஒருவர் உள்பட எண்மர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டன.
எல்.பி.கே. லைசென்ஸ்கள் விண்ணப்பங்களை அங்கீகரிப்பதில் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அந்த அரசு நிறுவன அதிகாரிகள் பொய்யான தகவல்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.
வாகனங்களின் மாடல் அவை பதிவு செய்யப்பட்ட வருடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெ.3,000 முதல் வெ.20,000 வரை லஞ்சம் வழங்கப்பட்டது எம்.ஏ.சி.சி.யின் உளவு நடவடிக்கைகள் வழி தெரிய வந்தது என கூறப்படுகிறது.
இதனிடையே, அம்மூவரின் கைது நடவடிக்கையை எம்.ஏ.சி.சி. துணை ஆணையர் (நடவடிக்கை) டத்தோஸ்ரீ அகமது குசைரி யாஹ்யா பெர்னாமாவிடம் உறுதிப்படுத்தினார். இந்த வழக்கு 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 16 மற்றும் 17வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.