ஷா ஆலம், நவ. 22- டாருல் ஏஹ்சான் இலவச குடிநீர்த் திட்டம் தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக அத்திட்ட நிபந்தனைகளை மறு ஆய்வு செய்வது உட்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் பரிசீலிக்க சிலாங்கூர் அரசு தயாராக உள்ளது.
தற்போது 5,000 வெள்ளியாக உள்ள குடும்ப வருமான வரம்பை உயர்த்துவதும் பரிசீலிக்கப்படும் பரிந்துரைகளில் ஒன்றாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக இலவச குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஆயினும் பொது மக்களின் கருத்துக்களை ஏற்க தயாராக இருக்கிறோம். ஒருவேளை உதவி பெறுவோரின் வருமான வரம்பை நாம் உயர்த்தலாம்.
இப்போது (இத்திட்டத்தில் பங்கு பெறுவதற்கான நிபந்தனை) 5,000 வெள்ளியாகும். அதை மீண்டும் பரிசீலிப்போம். வெ 7,000 முதல் வெ.8,000 வரை வருமான வரம்பு அதிகரிக்கலாம். அதை நாங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் போது தெரிவிப்போம் என்றார் அவர்.
இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐ.எஸ்.பி.) திட்டத்தின் செயல்திறன் மற்றும் சாதனைகள் குறித்து சிஜாங்காங் உறுப்பினர் டாக்டர் அகமது யூனுஸ் ஹைரி எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இதற்கிடையில், சிலாங்கூரில் 319,000 குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் இலவச குடிநீய் திட்டத்தின் பலனை அனுபவிப்பதாகவும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத காரணத்திற்காக 20,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்றும் அமிருடின் குறிப்பிட்டார்.
உண்மையில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே இலவச தண்ணீர் திட்டம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக மாநில அரசு பதிவைத் திறந்துள்ளது என்று அவர் விளக்கினார்.
உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே இலவச நீர் கிடைப்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம், யூகத்தின் மூலம் அல்ல என்று சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.