ad
ECONOMY

இருதயத்தை மலாக்காவிலிருந்து  கோலாலம்பூர் கொண்டு வர ஹெலிகாப்டர் உதவி

25 பிப்ரவரி 2024, 12:20 PM
இருதயத்தை மலாக்காவிலிருந்து  கோலாலம்பூர் கொண்டு வர  ஹெலிகாப்டர் உதவி

கோலாலம்பூர், பிப் 25- மனித இருதயத்தை மலாக்காவிலிருந்து கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு வர தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் ஹெலிகாப்படர் மூலம் உதவி நல்கப்பட்டது.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் அவசர மருத்துவத்திற்கான வான் ஆம்புலன்ஸ் (இ.எம்.ஏ.ஆர்.எஸ்.) ஹெலிகாப்டர் அந்த இருதயத்தை மலாக்கா அனைத்துலக  விமான நிலையத்திலிருந்து இங்கு பத்திரமாக கொண்டு வந்தது.

மூளைச்சாவு அடைந்த நோயாளி ஒருவரின் இருதயத்தை அவரின் குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கியதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் வான் நடவடிக்கை மேலாண்மைப் பிரிவு தலைவர் தலைமை ஆணையர் 1, கேப்டன் ரோஸ்லான் அஜிஸ் கூறினார்.

தேவைப்படும் நோயாளிக்கு அந்த இருதயத்தை வழங்க சம்பந்தப்பட்ட நோயாளியின் குடும்பத்தினர் பெருமனதுடன் இசைவு தெரிவித்ததைத் தொடர்ந்து இவ்விவகாரம் மலாக்கா மருத்துவமனையிடமிருந்து கோலாலம்பூர் மருத்துவமனையின் தேசிய உடல் உறுப்பு மாற்று மையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து இ.எம்.ஏ.ஆர்.எஸ். ஹெலிகாப்படர் தயார் படுத்தப்பட்டு இன்று காலை 7.15 மணியளவில் சுபாங்கிலுள்ள மத்திய பிராந்திய வான் தளத்திலிருந்து மலாக்கா அனைத்துலக விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டதாக அவர் சொன்னார்.

அந்த  ஹெலிகாப்டர் காலை 8.35 மணியளவில் கோலாலம்பூர் விமான நிலையம்  வந்தடைந்தது.  மலாக்கா மருத்துவமனையின் இருதய மற்றும் நரம்பியல்  பிரிவின் தலைவர் பேராசிரியர் டாக்டர் முகமது ஏஸானி முகமது தாயிப் உள்பட மூன்று மருத்துவ அதிகாரிகள் உடன் வந்தனர் என்றார் அவர்.

நோயாளிகளைக் கொண்டுச்  செல்வது மற்றும் மருத்துவ சாதனங்களை இடம் மாற்றுவது தவிர்த்து இத்தகைய உடல் உறுப்புகளை குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்லும் சேவையையும் தீயணைப்புத் துறை சுகாதார அமைச்சுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.