ad
NATIONAL

வங்கிக் கடன்களை திருப்பி செலுத்தும் காலக்கெடு மேலும் நீட்டிப்பு !!!

29 ஜூலை 2020, 8:45 AM
வங்கிக் கடன்களை திருப்பி செலுத்தும் காலக்கெடு மேலும் நீட்டிப்பு !!!

புத்ராஜெயா, 28 ஜூலை:

அனைத்து வங்கி கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஒத்திவைப்பையும், வங்கி இலக்கிடப்பட்ட உதவிகளையும் நீட்டிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்திருக்கிறது. எனினும், இந்த சலுகை, இவ்வாண்டும் வேலை இழந்த மற்றும் சம்பளம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மட்டுமே வழங்கப்படும். ஆகவே, தகுதிக் கொண்ட கடன் பெற்றவர்கள், ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கிச் சம்பந்தப்பட்ட வங்கிகளில் விண்ணப்பம் செய்யலாம் என்று பிரதமர் டான் ஶ்ரீ முஹீடின் யாசின் அறிவித்திருக்கிறார்.

இவ்வாண்டில் வேலையிழந்து, இன்னும் புதிய வேலைக் கிடைக்காதவர்களுக்கு, மூன்று மாதக் கால வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஒத்திவைப்பு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மூன்று மாதங்களுக்குப் பின்னரும், வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஒத்திவைப்பை , வங்கி நீட்டிக்கலாம். எனினும், அது சம்பந்தப்பட்ட நபரின் சூழ்நிலையைப் பொறுத்திருப்பதாக, டான் ஶ்ரீ முகிடின் யாசின் தெளிவுபடுத்தினார்.

இதனிடையே, சம்பளம் குறைக்கப்பட்ட தரப்பினருக்கு, கடன் வகையைப் பொருத்து, அவர்களின் சம்பளத் தொகைக்கு ஏற்ப, மாத கடன் குறைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

''உதாரணத்திற்கு, வீட்டுக் கடன் அல்லது தனிநபர் கடன், குறைக்கப்பட்ட சம்பள விகிதத்திற்கு ஏற்ப மாத கடன் குறைக்கப்படும். இந்த உதவி குறைந்தது ஆறு மாதத்திற்கு வழங்கப்படும். சம்பந்தப்பட்ட சம்பளத்தைப் பொருத்து அதன் பின்னரும், அந்த உதவி நீட்டிக்கப்படலாம்.'' என்று அவர் கூறினார்.

கடன் பெற்ற தனிநபருக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவர்களுக்கும் உதவிகள் வழங்கப் படுகின்றன. நிர்ணயிக்கப்பட்ட காலகட்டம் வரை, வட்டி மட்டுமே செலுத்துதல் அல்லது, மாதக் கட்டணத்தைக் குறைப்பதற்காக மொத்த கடன் தவணையை அதிகரிப்பது அல்லது நிலையான பொருளாதார சூழ்நிலையைக் கொண்டிருக்கும் வரையில் இதர விலக்கு அளிக்கப்படுதல் ஆகியவை அதில் அடங்கும்.

இந்நிலையில், வாகன தவணைக் கடன் பெற்றவர்களுக்குப் பொருத்தமான மாத கட்டணத்திற்கான அட்டவணையும் வழங்கப்படும். வாகன தவணைக் கடன் சட்டத்தைப் பொருத்து, மாதக் கட்டண விகிதம் குறைக்கப்படுவதற்கு, மொத்த கடன் தவணை அதிகரிக்கப்படலாம் என்றும் முகிடின் தெளிவுபடுத்தினார்.

-- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.